இராமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா நெற்பயிர் காப்பீடு:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
இராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் சம்பா நெற்பயிரை முழு வீச்சில் சாகுபடி செய்து வருகின்றனர். இதுவரை 3.34 இலட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 15.11.2025 வரை 1 இலட்சத்து 13 ஆயிரம் விவசாயிகளால் 3.09 இலட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில்,சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி 2025 நவம்பர் 15ம் தேதி என அறிவிக்கை செய்யப்பட்டிருந்தது.எனினும் இராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக துவங்கியதால்,சம்பா நெல் விதைப்பு பணிகள் தாமதமானதாலும்,வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டுள்ளதால் அடங்கல் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாலும்,சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க விடுபட்ட அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்,சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான கடைசி தேதி 2025 நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்கள்,தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நவம்பர் 30-ம் தேதிக்குள் பதிவுசெய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



