இராமநாதபுரத்தில் ஸ்பார்ஸ் ஓய்வூதிய குறைதீர்க்கும் முகாம்:ஓய்வூதியம் சார்ந்த குறைகளுக்கு துரித தீர்வு!!!

இராமநாதபுரம் கேணிக்கரை யாஃபா மஹாலில் சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுவை கடற்படை தலைமையகம் சார்பாக பாதுகாப்பு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்காக ஓர் மாபெரும் ஸ்பார்ஸ் குறைதீர்ப்பு முகாம் மற்றும் வருடாந்திர உயிர் சான்று அடையாளம் காணும் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன்,ஐடிஏஎஸ் மற்றும் தமிழகம் மற்றும் புதுவை கடற்படை தலைவர் ரியர் அட்மிரல் சதீஷ் செனாய்,என்.எஸ்.எம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஸ்பார்ஸ் ஓய்வூதிய திட்டத்தில் உள்ள சிறப்பம்சங்களை பற்றி விரிவாக விளக்கினர்.

இம்முகாமில் சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம்,அலகாபாத் முதன்மை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம்,ஆவண அலுவலகங்கள்,வங்கிகள் ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கு கொண்டு 20 சேவை முகப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஓய்வூதியதாரர்களின் பல்வேறு ஓய்வூதியம் சார்ந்த குறைகளுக்கு துரித தீர்வு காணப்பட்டன.மேலும் பல்வேறு ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் முறையில் உயிர் சான்று அடையாளம் காணப்பட்டது.இம்முகாமில் 400 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர்.முகாமில் கலந்து கொண்ட குடும்ப ஓய்வூதியதாரர் பாலாஜி அவர்களின் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓய்வூதிய நிலுவைத் தொகையாக இருந்த ரூபாய் 10 லட்சத்திற்கு உடனடியாக காசோலை வழங்கப்பட்டது.

மேலும் இம்முகாமில் தாய்நாட்டிற்காக வீரமரணம் அடைந்த ஓய்வூதியதாரர்களின் மனைவி/குடும்ப உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.




