குதக்கோட்டை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் புதிய வீடுகளுக்கு 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்:விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு!!!

இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
இராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்,குதக்கோட்டை ஊராட்சியில் 2023-2024 ஆண்டு ஒதுக்கீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் 100 புதிய வீடுகளுக்கு 100 பயனாளிகள்,தேர்வு குழு உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.இந்த வீடுகளுக்கு பின்வரும் பிரிவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஆதிதிராவிடர் 40 எண்ணிக்கை, பிற்படுத்தப்பட்டோர் 25 எண்ணிக்கை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 25 எண்ணிக்கை, மற்றவர்கள் 10 எண்ணிக்கை மொத்தம் 100 எண்ணிக்கை சமத்துவபுரம் வீடுகளுக்கான பயனாளிகளுக்கு ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதில், போதுமான விண்ணப்பங்கள் வரப்பெறவில்லை.எனவே,திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய எல்கைக்குள் தற்போது வசிக்கும் பொதுமக்களில், சமத்துவபுரம் வீடு கோரும், மேற்கண்ட பிரிவினைச் சேர்ந்தவர்கள்,விண்ணப்பத்தினை எழுத்து மூலமாக,தற்போது குடியிருக்கும் முகவரியினை தெளிவாக குறிப்பிட்டும்,ஜாதி சான்றிதழுடன் ஆதார் அட்டை,குடும்ப அட்டை நகல்கள் ஆகியவற்றுடன் 28.11.2025 (வெள்ளிக்கிழமை) மாலை 5.45 மணிக்குள் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (வட்டார ஊராட்சி) நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகளில்,மாற்றுத்திறனாளிகள்,விதவைகள்,கணவரால் கைவிடப்பட்டவர்கள்,மகளிரை தலைமையாகக் கொண்ட குடும்பங்கள்,முன்னாள் இராணுவத்தினர்,ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் கொண்ட குடும்பங்கள், திருநங்கைகள்,எச்.ஐ.வி/எய்ட்ஸ்/காசநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்,வெள்ளம் மற்றும் தீ போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட ஏழை மற்றும் மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.எனவே,அதற்கான சான்றினை இணைக்க வேண்டும்.ஏற்கனவே சிமெண்ட் கான்கீரிட் கூரை வீடு உள்ளவர்கள், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், பாரத பிரதமர் வீடுகள் குடியிருப்பு திட்டம் (ஊரகம்), கலைஞரின் கனவு இல்லம் திட்டம், மீனவர்களுக்கான வீடுகள் வழங்கும் திட்டம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மலைவாழ் மக்களுக்கான வீடுகள் கட்டும் திட்டம் உள்ளிட்ட அரசின் எந்தவொரு இலவச வீடுகள் வழங்கும் திட்டங்களின் கீழ் பயன்பெற்றவர்கள் சமத்துவபுரம் வீடு பெற தகுதியில்லை.பயனாளிகளின் தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.விண்ணப்பிப்பதன் மூலமாக வீடு வழங்கிட எந்தவொரு முன்னுரிமையும் கோர இயலாது.மாதிரி விண்ணப்பபடிவத்தினை திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் குதக்கோட்டை ஊராட்சி அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



