இராமநாதபுரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்:மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது!!!

இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வேளாண்துறை சார்ந்த அலுவலர்கள் வேளாண்மைத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.தொடர்ந்து,கடந்த மாத விவசாய குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும்,நிலுவையில் உள்ள மனுக்களின் நிலை தொடர்பாகவும் அலுவலர்கள் எடுத்துரைத்தனர்.இன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் வட்டார வாரியாக தங்கள் பகுதியில் உள்ள வேளாண் தொடர்பான கோரிக்கைகளையும், தேவைகளையும் தெரிவித்தனர். அவற்றில் கால்வாய் தூர்வாருதல்,மின் இணைப்பு,கண்மாய்களில் உள்ள கரைகளை மேம்படுத்துதல், பயிர்க்கடன்,கூட்டுறவு கடன் தொடர்பாக கோரிக்கை வைத்தனர்.மேலும் வயல்வெளிகளில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரிசெய்திட வேண்டும் எனவும், அறுவடை காலம் துவங்கும் முன்னர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்வது தொடர்பாகவும்,உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகளுக்கு மாவட்ட கலெக்டர் இது தொடர்பான சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதுடன்,விவசாயிகள் வழங்கும் ஒவ்வொரு மனுவின் மீதும் துறை சார்ந்த அலுவலர்கள் காலதாமதமின்றி உரிய நடவடிக்கை மேற்கொண்டு மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மனுதாரருக்கு காலதாமதமின்றி தெரிவித்திட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன்,வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) பாஸ்கரமணியன்,கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் ஜூனு,மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் ராஜலெட்சுமி,மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) வாசுகி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.



