இராமேஸ்வரம் தீவுப் பகுதியில் சட்டவிரோத போதைப்பொருட்கள் விற்பனையால் 3 நாட்களில் 3 படுகொலைகள்:கொலை நகரமாகிறதா? ஆன்மீக நகரம்:சட்டம்,ஒழுங்கு கேள்விக்குறி?-பா.ம.க மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம் கண்டனம்!!!

இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் தேனி சை.அக்கிம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இராமநாதபுரம் மாவட்டம்,இராமேஸ்வரம் தீவுப் பகுதியில் சட்டவிரோத மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையால் தொடர் படுகொலைகள் நடைபெற்று வருகிறது.தமிழகத்தின் புண்ணிய பூமியாக போற்றப்படும் இராமேஸ்வரம் தற்போது போதை ஆசாமிகளின் புகழிடமாக மாறி வருகிறது.நேற்று முன்தினம் சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி ஷாலினியை தன்னை காதலிக்க மறுத்த காரணத்திற்காக அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்பவர் வழிமறித்து கத்தியால் குத்தி படுகொலை செய்தது ஒட்டு மொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.அந்த சுவடு மறைவதற்குள் இராமேஸ்வரம் தீவுப்பகுதி பாம்பனில் கொடிகட்டிப் பறந்த சட்ட விரோத மது விற்பனையை தட்டிக்கேட்டதால் அன்னை நகரை சேர்ந்த சமையல் மாஸ்டர் அன்சாரி என்பவர் படுகொலை செய்யப்பட்டதாக நேற்றைய தினம் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் பாம்பன் பகுதியில் உள்ள அரசு மதுபானக்கடை பொதுமக்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகாமையில் உள்ளது.அதனை உடனடியாக பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும்.தமிழகத்தில் மிக பிரசித்தி பெற்ற ஆன்மீக நகரமாக விளங்கும் இராமேஸ்வரம் கொலை நகரமாக மாறி வருவது வெட்கக்கேடான விஷயம்.பாம்பன் பகுதியில் முன்னாள் அரசுப் பேருந்து ஓட்டுநர் ரவிச்சந்திரன் என்பவர் 2 மதுக்கூடங்களை நடத்தி வருவதாகவும்,அந்த பகுதி முழுவதும் சட்டவிரோத மது விற்பனையை ஊக்கப்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தமிழக அரசும்,காவல்துறையும் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு சட்டவிரோத மது விற்பனை மற்றும் போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்களையும்,மது அருந்தி விட்டு பொது மக்களுக்கு இடையூறு செய்யும் நபர்களையும் கண்டறிந்து இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதுடன்,சட்ட விரோத மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து,அவர்களுக்கு சொந்தமான அசையும்,அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.இராமேஸ்வரம் தீவுப் பகுதியில் 3 நாட்களில் 3 படுகொலை அரங்கேறியிருப்பது இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்,ஒழுங்கை கேள்விக் குறியாக்கியுள்ளது.கடந்த 19-ம் தேதி ஒருதலைக் காதலால் 12-ம் வகுப்பு மாணவி கத்தியால் குத்தி கொலை,20-ம் தேதி மண்டபம் அகதிகள் முகாமில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை,நேற்று சட்ட விரோத மது விற்பனையை தட்டிக்கேட்டதால் சமையல் மாஸ்டர் அன்சாரி படுகொலை என 3 நாட்களில் 3 தொடர் படுகொலைகள் அரங்கேறியிருப்பது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.இது போன்ற நடவடிக்கை தொடர்ந்தால் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆணைக்கிணங்க,பொதுமக்களை ஒன்று திரட்டி இராமநாதபுரம் மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அந்த கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



