பரமக்குடி (தனி) சட்டமன்ற தொகுதியில் பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவம் திரும்ப பெறும் பணி:வாக்காளர் பதிவு அலுவலர்/வருவாய் கோட்டாட்சியர் தகவல்!!!

இராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி (தனி) சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்/வருவாய் கோட்டாட்சியர் சரவணப் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி,209 பரமக்குடி (தனி) சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (Special Intensive Revision) நடைபெற்று வருகிறது.அதாவது தற்போது வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களையும் இதற்கு முந்தைய தீவிர சிறப்பு திருத்தத்துடன் (2002-ல் நடைபெற்றது) ஒப்பீடு செய்வதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கெடுப்புப் படிவம் வீடுவீடாக வழங்கும் பணி 04.11.2025 முதல் தொடங்கப்பட்டு பூர்த்தி செய்த படிவங்களை திரும்பப் பெறும் பணி நடைபெற்று வருகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்பப் பெறுவதற்கு 04.12.2025 கடைசி நாள் ஆகும்.எனினும் கடைசி நாட்களில் அதிக அளவில் ஒட்டுமொத்த மனுக்களையும் பெற்று பதிவேற்றம் செய்வது மிகவும் கடினம் என்பதால்,கணகெடுப்புப் படிவம் தொடர்பாக கீழ்க்காணும் வழிமுறைகளைப் பயன்படுத்த பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
படிவங்களை நிரப்புவதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர் உதவுவர் எனினும் தாங்களாகவே https://erolls.tn.gov.in/electoralsearch/என்ற இணையதளம் மூலம் தமிழ்நாட்டில் வாக்காளர்களாக இருப்பின் விவரங்களை முடிந்த வரை தமிழில் அளித்து 2002-SIR வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் விவரங்களை அறிந்துகொள்ள முடியும் அல்லது https://erolls.tn.gov.in/Rollpdf/SIR 2002.aspx மாவட்டம் சட்டமன்றத் தொகுதி மற்றும் பாகம் எண் ஆகிய விவரங்களை அளித்து 2002- SIR முழு வாக்காளர் பட்டியல் விவரங்களை பதிவிறக்கம் செய்ய முடியும்.
எந்த வாக்காளராவது தங்களுக்கான கணக்கீட்டுப் படிவங்களைப் பெறவில்லை எனில் தங்களது வாக்குச்சாவடி நிலை அலுவலரை உடனடியாக தொடர்பு கொண்டோ அல்லது தங்களது பாகத்திற்குரிய உதவி வாக்காளர் பதிவு அலுவலரை (உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள்: பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட பாகங்கள் நகராட்சி ஆணையாளர், பரமக்குடி, பரமக்குடி கிராமத்திற்குட்பட்ட பாகங்கள் வட்டாட்சியர், பரமக்குடி, கமுதி வட்டத்திற்குட்பட்ட பாகங்கள் வட்டாட்சியர், கமுதி, இராஜசிங்கமங்களம் வட்டத்திற்குட்பட்ட பாகங்கள் வட்டாட்சியர், இராஜசிங்மங்களம்) தொடர்பு கொண்டோ உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.இந்தியத் தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை BLO App (Data Entry) மூலம் 04.12.2025ற்குள் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. 12 நாட்கள் மட்டும் உள்ளதால் இனியும் காலதாமதம் செய்யாமல் தங்களது பகுதிக்கு வந்து படிவங்களை பெற்றுக் கொண்டிருக்கும் தங்களது பாகத்திற்குரிய வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அல்லது தங்களது பாகத்திற்குரிய உதவி வாக்காளர் பதிவு அலுவலரை தொடர்பு கொண்டு படிவத்தை அளிக்கலாம்.
மேலும்,இன்று (23.11.2025 ஞாயிற்றுக் கிழமை) அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் SIR உதவிமையங்கள் செயல்பட உள்ளது.எனவே,பொதுமக்கள் தங்களுக்கான படிவங்களைப் பூர்த்தி செய்வதற்கும்,பதிவேற்றம் செய்வதற்கும் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை முகாம்களிலேயே அளிக்கலாம்.மேலும் படிவம் பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் உதவி மைய முகாம்களில் விளக்கம் பெற்று உரிய முறையில் பூர்த்தி செய்து வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி இதுவரை படிவம் கிடைக்கப் பெறாத பொதுமக்கள் பெற்று பூர்த்தி செய்து திரும்ப வழங்கவும்,ஏற்கனவே படிவம் பெற்று திரும்ப வழங்காத பொதுமக்கள் உடனடியாக வழங்கும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



