இராமநாதபுரத்தில் தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்:5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தலைவர் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது!!!

தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நுழைவு வாயில் முன் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பாதிக்கப்பட்ட நெல்,மிளகாய் விவசாயிகள் கொட்டும் மழையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் கதிர்கள் பருவம் தவறி பெய்த மழையால் மீண்டும் முளைத்த நெல்லால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.8,000 நிவாரணத்தொகை வழங்க வேண்டும்,இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழை,பருவம் தவறி பெய்த மழையால் முற்றிலுமாக அழிந்த மிளகாய் விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை,முழு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். இராமநாதபுரம் மாவட்டத்தை இயற்கை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்து விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு கடனை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும்,சுல்தான் இஸ்மாயில் குழு ஓஎன்ஜிசி ஆய்வறிக்கையை தமிழக அரசிதழில் ஆணை வெளியிட வேண்டும்.இராமநாதபுரம் மாவட்டம் 16,500 எக்டேர் மிளகாய் சாகுபடியில் தமிழ்நாட்டில் முதலிடம்,12,000 எக்டேர் பருத்தி சாகுபடியில் தமிழ்நாட்டில் முதலிடம்,1.37 லட்சம் எக்டேர் நெல் சாகுபடியில் தமிழ்நாட்டில் 4 ஆம் இடம் இத்தகைய சிறப்புகளுடன் வைகை படுகை பகுதியான இராமநாதபுரம் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்க நிறுவனத் தலைவர் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் பேசினார்.இதில் ஏராளமான விவசாயிகள்,விவசாயத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.



