மதநல்லிணக்கத்தை ஊக்கப்படுத்தி அரசு வழங்கிய ரூ.1 கோடி மேலமடை ஊராட்சியை மேலும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும்-முதல்வருக்கு நன்றி தெரிவித்து காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ பெருமிதம்!!!

இராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மேலமடை ஊராட்சிக்கு சமூக நல்லிணக்கத்திற்காக அரசு வழங்கிய ரூ.1 கோடி நிதியானது அந்த ஊராட்சியை மென்மேலும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் எனவும்,விருது வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தும் இராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்,கல்வி,சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சாதி வேறுபாடின்றி சமூக நல்லிணக்கத்துடன் வாழும் 10 கிராம ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க கிராம ஊராட்சிகள் விருது மற்றும் வளர்ச்சி பணிகளுக்காக தலா ரூ.1 கோடி வீதம் அந்தந்த யூனியன் பி.டி.ஓக்களிடம் வழங்கினார்.இந்த 10 கிராம ஊராட்சிகளில் இராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி யூனியன் மேலமடை ஊராட்சியும் ஒன்று.அந்த ஊராட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் என அனைத்து சமுதாய மக்களும் சாதி,மத வேறுபாடின்றி அனைத்து வகையிலும் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகின்றனர்.அதன் படி தேர்வு செய்யப்பட்ட மேலமடை ஊராட்சிக்கு சமூக நல்லிணக்க கிராம ஊராட்சி விருது மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்புல்லாணி யூனியன் பி.டி.ஓ சே.இராஜேஸ்வரியிடம் வழங்கினார்.

இது குறித்து இராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ நமது “அதிரடி செய்தி” இணையதளத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்ததாவது:-
இராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி யூனியன் மேலமடை ஊராட்சிக்கு சமூக நல்லிணக்க கிராம ஊராட்சிகள் விருது மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.1 கோடிக்கான காசோலை கிடைத்துள்ளது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது.மேலும் இந்த விருது மற்றும் காசோலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திருக்கரங்களால் வழங்கியதை பெருமையாக கருதுகிறேன்.மேலும் இந்த விருது மற்றும் காசோலை திருப்புல்லாணி யூனியன் மேலமடை ஊராட்சியை மேலும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில்,10 கிராம ஊராட்சிகளை தேர்வு செய்து,அதிலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு ஊராட்சியை தேர்வு தமிழக அரசுக்கும்,அரசு அதிகாரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த விருது கிடைத்தது மேலமடை ஊராட்சிக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இராமநாதபுரம் மாவட்டத்திற்கே பெருமை.திருப்புல்லாணி யூனியன் மேலமடை ஊராட்சியை முன்னுதாரணமாக கொண்டு திராவிட மாடல் நல்லாட்சியில் மாவட்டத்தின் இன்ன பிற கிராம ஊராட்சிகளும் மத நல்லிணக்கத்துடன் செயல்பட்டு இந்த விருதினை பெற முயற்சி செய்ய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.



