தமிழகம்மாவட்டச் செய்திகள்

சாயல்குடியில் நாடார் சமுதாயத்தினர் கண்டன உண்ணாவிரதம்:யூடியூபர் முக்தார் அஹமதை கைது செய்யக் கோரிக்கை!!! 

முன்னாள் முதல்வர் காமராஜர் மற்றும் நாடார் சமுதாயம் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி யூடியூப் சேனல் நடத்தி வரும் முக்தார் அகமதுவைக் கைது செய்ய வலியுறுத்தி,இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் இன்று அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை மற்றும் கடலாடி வட்டார நாடார் சங்கம் சார்பில் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

சாயல்குடியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது…

சாயல்குடி பேரூராட்சி முன்பு நடந்த இந்தப் போராட்டத்தில்,முக்தார் அஹமதை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்,அவர் நடத்தி வரும் ‘மை இந்தியா 24 X 7’ யூடியூப் சேனலை நிரந்தரமாக முடக்க வேண்டும்,மற்றும் பொய்யான,பிரிவினைவாதச் செய்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்தப் போராட்டத்தில் சாயல்குடி,கன்னிராஜபுரம்,நரிப்பையூர்,மாரியூர் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை நிர்வாகிகள்,கடலாடி வட்டார நாடார் சங்கத்தினர் மற்றும் நாடார் சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின்போது, “தமிழக அரசே! காவல்துறையே! கைது செய்! கைது செய்! முக்தாரை கைது செய்!” எனப் பலத்த முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பைப் பதிவு செய்தனர். நாடார் சமுதாய நலன் காக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை மாநிலப் பொதுச் செயலாளர் சிவ செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை சாயல்குடி பேரூராட்சி சேர்மன் ஆர்.மாரியப்பன் துவக்கி வைத்தார்.ஜெயலலிதா பேரவை மாநில துணைச்செயலாளர் சேது பாலசிங்கம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.போராட்டக் குழுத் தலைவர்கள்,தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால்,இந்தப் போராட்டம் மாநில அளவில் விரிவுபடுத்தப்படும் என்றும், சட்டமன்றம் முன்பாகப் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

நாடார் இளைஞர் பேரவை மாநிலத் துணைத் தலைவர் கன்னிகாபுரி பாஸ்கரன்,மாவட்ட செயலாளர் வி.வி.ஆர் நகர் ஜெயராஜ்,சாயல்குடி வட்டார நாடார் சங்கத் தலைவர் ஆர். மாடசாமி,சாயல்குடி வணிகர் சங்க பேரமைப்பு செயலாளர் எஸ்.டி. சுரேஷ்குமார்,சாயல்குடி பேரூராட்சி துணைத் தலைவர் மணிமேகலை பாக்கியராஜ்,சாயல்குடி அதிமுக நகர செயலாளர் ஜெயபாண்டியன்,கருப்பட்டி மொத்த வியாபாரி பூப்பாண்டியபுரம் ராஜ்,சேவாதள காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எஸ்.வி.கணேசன்,கன்னிராஜபுரம் உத்தரலிங்கம் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.பி.அந்தோணி ராஜ் அனைவரையும்  வரவேற்று பேசினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button