இராமநாதபுரம் மாவட்ட வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்கல்,திருத்தம் கோரிக்கைகள் தொடர்பாக விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு!!!

இராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
2026-ஆம் ஆண்டு சனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.இதன் ஒரு கட்டமாக கணக்கெடுப்புப் பணி முடிக்கப்பட்டு கடந்த 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள் மற்றும் புதிதாக பெயர் சேர்க்க வேண்டியவர்கள் 19.12.2025 முதல் 18.01.2026 வரையிலான காலத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்கல்,திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகள் குறித்து விண்ணப்பங்கள் அளிக்கலாம்.பொதுமக்கள் இம்மனுக்களை எளிதில் அளிப்பதற்காக 27.12.2025, 28.12.2025, 03.01.2026 மற்றும் 04.01.2026 ஆகிய நான்கு நாட்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.இராமநாதபுரம் மாவட்டத்தில்,வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக வாக்காளர் பட்டியல் பார்வையாளராக சென்னை, தமிழ்நாடு – தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் மரு.ஏ.அருண் தம்புராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக கருத்துக்கள் அல்லது குறைகள் தெரிவிக்க விரும்புபவர்கள் இவரிடம் 7358150776 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத நபர்கள் மற்றும் 01.01.2026 அன்று 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்கு படிவம் 6 -ல் விண்ணப்பங்களை சிறப்பு முகாம்களில் அளிக்கலாம். அதே போன்று வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தங்கள் ஏதேனும் செய்ய வேண்டியிருப்பின் படிவம்-8 ல் விண்ணப்பம் அளிக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஒருவரது பெயரை நீக்கம் செய்ய வேண்டியிருப்பின் படிவம்-7 ல் விண்ணப்பம் அளிக்கலாம்.மேலும்,இந்த விண்ணப்பங்களை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் நேரிலும் மற்றும் அஞ்சல் மூலமாகவும் அளிக்கலாம். இந்த விண்ணப்பங்களை https://voters.eci.gov.in என்ற வலைதளத்தின் மூலமும், Voters Helpline என்ற ஆன்ட்ராய்டு செயலி மூலமாகவும் ஆன்லைன் விண்ணப்பமாக பதிவு செய்யலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



