தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்..!திருப்பரங்குன்றம் ஊர் பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம்!!!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, திருப்பரங்குன்றம் ஊர் பொதுமக்கள் சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது.
திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த அமைதியான உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு கருதி 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி, உள்ளூர் மக்கள் சார்பில் அனுமதி கேட்கப்பட்ட நிலையில், போலீசார் முதலில் மறுப்பு தெரிவித்தனர். இதனை எதிர்த்து, திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபு, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், திருப்பரங்குன்றம் மலை மற்றும் முருகப்பெருமான் கோவில் வரலாறு மிகவும் பழமையானது என்றும், திருமுருகாற்றுப்படை, பரிபாடல், அகநானூறு, மதுரைக்காஞ்சி, கலித்தொகை, தேவாரம் உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் திருப்பரங்குன்றம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் மூலம், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பது உறுதியாகிறது என்றும், 1926-ம் ஆண்டு வரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், உயர் நீதிமன்ற நிபந்தனைகளின் அடிப்படையில், குறிப்பிட்ட இடத்தில் 50 பேர் மட்டும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்கலாம் என்றும், அரசியல் கட்சி கொடிகள் பயன்படுத்தக் கூடாது, தனிநபர் அல்லது அரசியல் கட்சிகளை தாக்கும் வகையில் பேசக் கூடாது, ஒரே ஒரு மைக் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கினார்.
இந்த உத்தரவின் அடிப்படையில், இன்று திருப்பரங்குன்றத்தில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது. இந்த போராட்டத்தில் இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர்.



